1 மார்., 2022

கொள்கை அரசியல் எதிர் அரசியல் எதார்த்தம் எனும் கூட்டணி அரசியல்: எது சிறந்தது?

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அக்கட்சிகள் தேர்தலை சந்திக்கும்போது எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இருவகையான பிரிக்கலாம். ஒன்று தனது கட்சி கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று தனித்து களம் காண்பது இரண்டாவது தான் கொண்ட கொள்கை எதுவாயினும் நமது கட்சி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று பிரதிநிதிதுவம் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அரசியல் செய்து தேர்தலை சந்திப்பது. இந்த இரு வகையான கட்சிகள் எடுக்கும் நிலைப்பாட்டிலும் ஒரு சில சாதக பாதகங்கள் உள்ளன. ஆனால் இதில் எவை நம் மக்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது.

தனித்து களம் காணும் கொள்கை பிடிப்புள்ள கட்சிகள்

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் கட்சிகள் தமிழகத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுவும் தேர்தலில் வெற்றி தோல்விக்கு அப்பார்பட்டு எந்த நேரத்திலும் தான் கொண்ட கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக நிற்கும் கட்சிகள் சொற்பமாகவே உள்ளது. மக்கள் மத்தியில் அரசியல் குறித்து மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவதே அத்தகைய கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்ட நிலையில் கொள்கை கோட்பாடுள்ள கட்சிகள் தான் கொண்ட கொள்கையை மக்களிடம் கொண்டு சென்று அதன் அடிப்படையிலேயே வாக்குகள் சேகரிக்கின்றன.

கொள்கையுடன் செயல்படும் கட்சியின் சிறப்பு

தான் கொண்ட கொள்கையின் அடிப்படையில் செயல்படும் கட்சியானது தனது அரசியல் சித்தாந்தம் சிறந்தது என்பதை மக்களுக்கு தெரிவிக்க தேர்தல் களத்தை பயன்படுத்துகிறது. அத்தகைய கட்சி தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதை காட்டிலும் தனது கொள்கை மற்றும் கோட்பாடுகளை மக்களிடம் சென்றடைய செய்வதே உண்மையான அரசியல் வெற்றியாக கருதிகிறது. ஏனென்றால் தற்போதைய அரசியல் சூழலில்  அரசியல் என்பது ஒரு சிலரின் சுயநலத்திற்காக பயன்படும் தொழிலாக மாறிவிட்டது. அத்தகைய நிலை நீடித்துவந்தால் நமது நாட்டு அரசியலுக்கும் அதனை சார்ந்து வாழும் நம் மக்களுக்கும் எதிர்காலத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும். நாம் வாழும் நாடு கொஞ்சம் கொஞ்சமாக மனிதாபிமானம் அற்று மனிதன் வாழத்தகுதியற்ற நாடாக மாறிவிடும். எனவே அரசியல் என்பது சுயநலமற்ற சேவையாக மீண்டும் மாற தான் கொண்ட கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் அரசியல் கட்சி நம் மக்களுக்கு  இன்றியமையாத தேவையாக உள்ளது என்பது எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

எதார்த்த அரசியல் எனும் கூட்டணி அரசியல்

தமிழகத்தில் இன்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்று தனது கட்சிக்கு பிரதிநிதிதுவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக  எதார்த்த அரசியல் என்று குறிப்பிட்டு தனது கொள்கை மற்றும் கோட்பாடுகளில் அங்கும் இங்கும் சில சமரசங்களை செய்துகொண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல்களை சந்திக்கின்றன. அத்தகைய கட்சிகள் ஆரம்ப காலத்தில் தனது கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக நின்று தேர்தலில் தனித்து தனித்து போட்டியிட்டன. ஆனால் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த காரணத்தால் நம்பிக்கையிழந்து தனது கொள்கைகளில் ஒரு சில சமரசங்க்களை செய்துகொண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஒரு சில வெற்றிகளை பெற்று வருகின்றன. அத்தகைய வெற்றிகளின் மூலம் அக்கட்சிகளுக்கு பாராளுமன்றம், மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கின்றன.  

தேர்தலில் வெற்றிபெறுவதே அரசியலா?

நமது நாட்டில் பெரும்பாலானோர் தேர்தலில் வெற்றிபெரும் அரசியல் கட்சியே சிறந்தது என்று தவறான புரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் வாக்குகளுக்காக கட்சிகள் வழங்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்த கட்சிக்கு வாக்கு செலுத்துகின்றனர். அவர்களை பொருத்தவரை அரசியல் கட்சி என்றால் பணம் செலவழித்து தேர்தலில் வென்றபிறகு முதலீடு செய்த பணத்தை இலாபத்தோடு அருவடை செய்யும் என்பதே புரிதலாகவும் அதுவே இன்றைய எதார்த்த நிலையாகவும் மாறியுள்ளது.

அரசியல் என்பது மக்களுக்கும், பல்லுயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும். ஆனால் இந்த உண்மையை நம்மில் பலர் உணர மறுத்து வெற்றிக்காக என்னவேண்டுமானலும் செய்யலாம் என்ற சுயநலம் நம்மிடையே இருப்பதால்தான் நமது சமூகம் சுற்றுச்சூழல் மாசு, பண மோசடி, சாதிய வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு பிரச்சனைகளை இன்றளவும் அதிக அளவில் சந்தித்து வருகிறது. இதற்கெல்லாம் மூல காரணம் நமது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைதான்.

“தலைவன் எவ்வழியே அவ்வழியே மக்களும்”  என்று குறிப்பிடுவார்கள். அதே போன்றுதான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தமது கட்சி தேர்தல் அரசியலில் வெற்றிபெற தான் கொண்ட கொள்கையிலிருந்து வெளியேறி பல சமரசங்கள் செய்து தான் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்த கட்சியின் தலைமையை ஏற்று கூட்டணி சேறும்போது அக்கட்சியின் தொண்டர்களும் தலைவனை பின்பற்றி சுயநலத்திற்காக எது செய்தாலும் நல்லதுதான் என்று எண்ணும் நிலைக்கு ஆளாகிறார்கள். இத்தகைய போக்குகளை அரசியல் கட்சிகள் தவிர்த்து இளைய சமுதாயத்திற்கு சுயநலமற்ற உண்மையான அரசியலை கற்றுத்தர முற்பட வேண்டும்.  

உறுதி வேண்டும்

தான் கொண்ட கொள்கையிலும் கோட்பாட்டிலும் கடைசி வரை உறுதியாக நின்று விடா முயற்சி செய்து வெற்றிபெற நம் நாட்டு மக்களுக்கு கற்றுத் தரும் கட்சியே உண்மையான அரசியல் கட்சியாகும். அத்தகைய கட்சியால் மட்டுமே உண்மையான அரசியலை செய்ய முடியும். அத்தகைய கட்சியால் மட்டுமே நம் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும். சந்தர்ப்பத்திற்கேற்ப நிறம் மாறும் கட்சிகள் நம் மக்களுக்கு துரோகமே செய்வர். ஆகையால் கூட்டணி அரசியலைக் காட்டிலும் கொள்கை அரசியல் செய்யும் கட்சியே சிறந்ததாகும். அதுவே நமது நாட்டிற்கு நன்மை பயக்கும்.  


அரசியல் என்பது இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும் . அதாவது அனைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ ஏற்ற சுற்றுச்சூ...