21 ஆக., 2022

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அரசியலும்

அரசியல் என்பது இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும். அதாவது அனைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ ஏற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்திகொடுக்கும் மிகப் பெரிய பொறுப்பு அரசியலுக்கும் அரசியல் செய்பவர்களுக்கும் உள்ளது. இந்த உண்மையை தற்போதிருக்கும் அரசியல்வாதிகள் உணர்ந்தால்தான் நாம் இந்த பூமியில் நிம்மதியாக வாழமுடியும். இல்லையெனில், பூமி தாய் நம்மை கைவிட்டுவிடுவாள் என்பதை உணர்ந்து நமது நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அரசியல் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் இந்த பூமி குறித்த புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும். இயற்கை அளித்த கொடையான காடு, மலை, குன்றுகள், ஆறுகள், குளம், குட்டைகள் மற்றும் அவைகளை சார்ந்து வாழும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் மகத்துவம் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இவை அனைத்தும் நாம் உயிர்வாழ தேவையான காற்று, நீர், உணவு, உடை மற்றும் இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவையை  பூர்த்தி செய்ய உதவுகின்றது. எனவேதான் மனிதர்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால் நமது அரசியல் தலைவர்கள் இயற்கையின் மகத்துவத்தையும் உணர்ந்து, அதனை பேணி பாதுகாப்பதற்காக அரசியல் செய்வது இன்றைய சூழலில் அவசியமாக உள்ளது.

இயற்கை வளங்களை சுரண்டும் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு

அரசியல் என்றால் தேர்தலில் வென்று பதவி பெற்று இயற்கை அளித்த கொடையான காடு, மலைகளை டெண்டர் விட்டு கம்மிசன் சம்பாதிக்கலாம் என்று என்னும் அரசியல்வாதிகள் அத்தகைய  மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும். ஏனென்றால் அப்படி இயற்கை வளங்களை சுரண்டி சம்பாதிக்கும் பணம் இனி அவர்களுக்கு பயன்தரபோவதில்லை. ஏனென்றால் காடுகளை அழிப்பதனாலும், மலைகளை நொறுக்குவதனாலும் நாம் உயிர்வாழ தேவையான காற்று, நீர் ஆகியவை மாசடையும். நீர் தட்டுப்பாடும்  ஏற்படும் சூழல் உறுவாகி கரோனா போன்ற கொடிய நோய்களுக்கும் வித்திடும்.  எனவே பல கொடி ரூபாய் வைத்திருந்தாலும் நமது நாட்டில் சுற்றுச் சூழல் அழிக்கப்படடாள் அம்பானியால் கூட நிம்மதியாக வாழ முடியாது என்ற உண்மையை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் உணர வேண்டும்.

சுற்றுச்சூழல் விழுப்புணர்வு அவசியம்

மனித குளம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அரசும் , அரசியல் கட்சிகளும்  சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அடைய வேண்டும். காடு, மலைகள், ஏரிகளை பாதுகாப்பதின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் மக்களுக்கும் விழிப்புணர்வு அடைய செய்ய வைக்க வேண்டும்.

இயற்கையை அழிக்காமல் முன்னேற்றம் தேவை

முன்னேற்றம் என்ற பெயரில்  சாலைகள் அமைக்க  மலைகளை நொறுக்குவதும், காடுகள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைக்கும் செயல்களை தவிர்த்து அதற்கு பதிலாக மாற்று இடங்களை பரிசிலித்து அதற்கான உத்திகளை வகுத்து இயற்கை அளித்த வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இயற்கையை அழிக்காமல் நாம் முன்னேற மாற்று வழிகளைத் தேடி அதற்குறிய அரசியலை நமது நாட்டில் உள்ள அரசியல் காட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பேசாத அரசியல் கட்சிக்கு  அரசியல் செய்யும் தகுதியே கிடையாது. ஏனென்றால் சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. கரோனா, குரங்கு அம்மை போன்ற கொடிய நோய்களின் பிடியில் சிக்கியுள்ள நமக்கு நாம் இருக்கும் சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் நாம் உயிர் வாழ தேவையான தூய்மையான காற்றும், தூய்மையான குடிநீரும் அரிதாகிவிடும். எனவே அத்தகைய முக்கியமான விடயத்தை தவிர்க்கும் அரசியல் கட்சிகளை மக்கள் முற்றிலும் தவிர்ப்பார்கள். ஆகவே சுற்றுச்சூழல் குறித்த புரிதலோடு கலம் காணும் அரசியல் கட்சிகளுக்கே மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.  

1 மார்., 2022

கொள்கை அரசியல் எதிர் அரசியல் எதார்த்தம் எனும் கூட்டணி அரசியல்: எது சிறந்தது?

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அக்கட்சிகள் தேர்தலை சந்திக்கும்போது எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இருவகையான பிரிக்கலாம். ஒன்று தனது கட்சி கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று தனித்து களம் காண்பது இரண்டாவது தான் கொண்ட கொள்கை எதுவாயினும் நமது கட்சி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று பிரதிநிதிதுவம் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அரசியல் செய்து தேர்தலை சந்திப்பது. இந்த இரு வகையான கட்சிகள் எடுக்கும் நிலைப்பாட்டிலும் ஒரு சில சாதக பாதகங்கள் உள்ளன. ஆனால் இதில் எவை நம் மக்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது.

தனித்து களம் காணும் கொள்கை பிடிப்புள்ள கட்சிகள்

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் கட்சிகள் தமிழகத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுவும் தேர்தலில் வெற்றி தோல்விக்கு அப்பார்பட்டு எந்த நேரத்திலும் தான் கொண்ட கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக நிற்கும் கட்சிகள் சொற்பமாகவே உள்ளது. மக்கள் மத்தியில் அரசியல் குறித்து மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவதே அத்தகைய கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்ட நிலையில் கொள்கை கோட்பாடுள்ள கட்சிகள் தான் கொண்ட கொள்கையை மக்களிடம் கொண்டு சென்று அதன் அடிப்படையிலேயே வாக்குகள் சேகரிக்கின்றன.

கொள்கையுடன் செயல்படும் கட்சியின் சிறப்பு

தான் கொண்ட கொள்கையின் அடிப்படையில் செயல்படும் கட்சியானது தனது அரசியல் சித்தாந்தம் சிறந்தது என்பதை மக்களுக்கு தெரிவிக்க தேர்தல் களத்தை பயன்படுத்துகிறது. அத்தகைய கட்சி தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதை காட்டிலும் தனது கொள்கை மற்றும் கோட்பாடுகளை மக்களிடம் சென்றடைய செய்வதே உண்மையான அரசியல் வெற்றியாக கருதிகிறது. ஏனென்றால் தற்போதைய அரசியல் சூழலில்  அரசியல் என்பது ஒரு சிலரின் சுயநலத்திற்காக பயன்படும் தொழிலாக மாறிவிட்டது. அத்தகைய நிலை நீடித்துவந்தால் நமது நாட்டு அரசியலுக்கும் அதனை சார்ந்து வாழும் நம் மக்களுக்கும் எதிர்காலத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும். நாம் வாழும் நாடு கொஞ்சம் கொஞ்சமாக மனிதாபிமானம் அற்று மனிதன் வாழத்தகுதியற்ற நாடாக மாறிவிடும். எனவே அரசியல் என்பது சுயநலமற்ற சேவையாக மீண்டும் மாற தான் கொண்ட கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் அரசியல் கட்சி நம் மக்களுக்கு  இன்றியமையாத தேவையாக உள்ளது என்பது எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

எதார்த்த அரசியல் எனும் கூட்டணி அரசியல்

தமிழகத்தில் இன்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்று தனது கட்சிக்கு பிரதிநிதிதுவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக  எதார்த்த அரசியல் என்று குறிப்பிட்டு தனது கொள்கை மற்றும் கோட்பாடுகளில் அங்கும் இங்கும் சில சமரசங்களை செய்துகொண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல்களை சந்திக்கின்றன. அத்தகைய கட்சிகள் ஆரம்ப காலத்தில் தனது கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக நின்று தேர்தலில் தனித்து தனித்து போட்டியிட்டன. ஆனால் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த காரணத்தால் நம்பிக்கையிழந்து தனது கொள்கைகளில் ஒரு சில சமரசங்க்களை செய்துகொண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஒரு சில வெற்றிகளை பெற்று வருகின்றன. அத்தகைய வெற்றிகளின் மூலம் அக்கட்சிகளுக்கு பாராளுமன்றம், மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கின்றன.  

தேர்தலில் வெற்றிபெறுவதே அரசியலா?

நமது நாட்டில் பெரும்பாலானோர் தேர்தலில் வெற்றிபெரும் அரசியல் கட்சியே சிறந்தது என்று தவறான புரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் வாக்குகளுக்காக கட்சிகள் வழங்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்த கட்சிக்கு வாக்கு செலுத்துகின்றனர். அவர்களை பொருத்தவரை அரசியல் கட்சி என்றால் பணம் செலவழித்து தேர்தலில் வென்றபிறகு முதலீடு செய்த பணத்தை இலாபத்தோடு அருவடை செய்யும் என்பதே புரிதலாகவும் அதுவே இன்றைய எதார்த்த நிலையாகவும் மாறியுள்ளது.

அரசியல் என்பது மக்களுக்கும், பல்லுயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும். ஆனால் இந்த உண்மையை நம்மில் பலர் உணர மறுத்து வெற்றிக்காக என்னவேண்டுமானலும் செய்யலாம் என்ற சுயநலம் நம்மிடையே இருப்பதால்தான் நமது சமூகம் சுற்றுச்சூழல் மாசு, பண மோசடி, சாதிய வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு பிரச்சனைகளை இன்றளவும் அதிக அளவில் சந்தித்து வருகிறது. இதற்கெல்லாம் மூல காரணம் நமது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைதான்.

“தலைவன் எவ்வழியே அவ்வழியே மக்களும்”  என்று குறிப்பிடுவார்கள். அதே போன்றுதான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தமது கட்சி தேர்தல் அரசியலில் வெற்றிபெற தான் கொண்ட கொள்கையிலிருந்து வெளியேறி பல சமரசங்கள் செய்து தான் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்த கட்சியின் தலைமையை ஏற்று கூட்டணி சேறும்போது அக்கட்சியின் தொண்டர்களும் தலைவனை பின்பற்றி சுயநலத்திற்காக எது செய்தாலும் நல்லதுதான் என்று எண்ணும் நிலைக்கு ஆளாகிறார்கள். இத்தகைய போக்குகளை அரசியல் கட்சிகள் தவிர்த்து இளைய சமுதாயத்திற்கு சுயநலமற்ற உண்மையான அரசியலை கற்றுத்தர முற்பட வேண்டும்.  

உறுதி வேண்டும்

தான் கொண்ட கொள்கையிலும் கோட்பாட்டிலும் கடைசி வரை உறுதியாக நின்று விடா முயற்சி செய்து வெற்றிபெற நம் நாட்டு மக்களுக்கு கற்றுத் தரும் கட்சியே உண்மையான அரசியல் கட்சியாகும். அத்தகைய கட்சியால் மட்டுமே உண்மையான அரசியலை செய்ய முடியும். அத்தகைய கட்சியால் மட்டுமே நம் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும். சந்தர்ப்பத்திற்கேற்ப நிறம் மாறும் கட்சிகள் நம் மக்களுக்கு துரோகமே செய்வர். ஆகையால் கூட்டணி அரசியலைக் காட்டிலும் கொள்கை அரசியல் செய்யும் கட்சியே சிறந்ததாகும். அதுவே நமது நாட்டிற்கு நன்மை பயக்கும்.  


11 பிப்., 2022

ஹிஜாப் சர்ச்சைக்கு நீதிமன்றம் தீர்வுகாணட்டும்

அரசியல்வாதிகளின் சுயநலத்தால் ஹிஜாப் Hijab சர்ச்சையாகியுள்ளது

மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றதை பெரிய பிரச்சனையாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையும் நோக்கத்தில் நமது சமூகத்தில் நஞ்சை விதைத்து மக்களிடையே மத ரீதியான பாகுபாட்டை உருவாக்கும் போக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது.

யார் பிரச்சனை

ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த பள்ளிக்கும் அதனால் பாதிக்கப்பட்ட மாணவி(களு)க்கும் உள்ள பிரச்சனையை பெரிதாக்கும் நோக்கத்தோடு அம்மாணவி பள்ளியில் நுழையும்போது தடுக்க முயற்சித்தது ஒரு கும்பல். பள்ளிக்கும் மாணவிக்கும் இருந்த பிரச்சனையில் ஒரு குறிப்பிட்ட கும்பலும் சேர்ந்தது. இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு நமது தேசத்தின் ஒற்றுமையையே சீர்குலைக்கும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனையாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தைப் பெரும் அற்ப எண்ணம் கோண்டு பல்வேறு கட்சிகளும், கட்சி தலைவர்களும் இந்த பிரச்சனையை அனுகி வருவது இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு இழுக்காகும்.

ஹிஜாப் அணிய தடை விதித்தது யார்?

கார்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடை விதித்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்  ஒரு பெண். ஆக பிரச்சனை அந்த மாணவிக்கும், அவர் பயிலும் பள்ளிக்கும் ஆகும். அப்படியிருக்கும்போது அப்பள்ளிக்கு அத்தகைய விதியை வகுக்கும் உரிமை உள்ளதா? இல்லையா? அத்தகைய விதி மாணவியின் அடிப்படை உரிமையை மீறுகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. எனவே பள்ளியின் விதியால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.  

பொறுப்புணர்வு இல்லாத அரசியல்வாதிகளும் ஊடகங்களும்

அப்படியிருக்கும்போது அப்பெண்ணுக்கு எதிராக கோசமிட்ட கும்பல் இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் ஈடுபட்டுள்ளது. தேவையில்லாமல் ஈடுபட்ட கும்பலின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அச்சம்பவத்தை ஊதி பெரிதாக்கி சமூக அமைதி சீர்குலையும் அளவிற்கு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், பொறுப்புணர்வு இல்லாத ஊடகங்களும் அற்ப அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருப்பது சரியல்ல.

தேசவிரோத சக்திகள்

அரசியல்வாதிகளின் இத்தகைய செயலால் தற்போது அண்டை நாட்டுக்காரனும் இந்தியாவுக்கு உபதேசம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. குறிப்பாக பாக்கிஸ்தானே நமக்கு உபதேசம் செய்யும் அளவிற்கு நிலை சென்றுள்ளது. போதாத குறைக்கு அத்தகைய நாடுகள் இச்சம்பவம் குறித்து அவதூறு செய்திகளையும் பரப்பி நம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதலங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே அரசியல் ஆதாயம் தேடுபவர்களிடமும் , நமது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செய்திகளை உண்மை என்று நம்ப வேண்டாம்.

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியா உலகத்திலே மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு பல்வேறு மதம், இனம், மொழி மற்றும் கலச்சாரத்தை சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு உள்ளனர்.  இந்தியாவை ஒரே ஒரு சம்பவத்தை வைத்து எடை போட்டுவிட முடியாது. அதே போன்று ஒரு சில கும்பல் மற்றும் அற்ப அரசியல் கட்சிகளை வைத்தும் எடைபோட்டுவிட முடியாது. இன்றளவும் இங்கு பல கட்சிகள் மாற்று அரசியல் பயணத்தில் நேர்மையான அரசியலும் செய்யத் தொடங்கியுள்ளன என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.  அனைத்திற்கும் மேலாக இந்த ஒரு சம்பவத்தால் எங்கள் மக்களின் சமூக ஒருமைப்பாட்டை அவ்வளவு எளிதில் சீர்குலைத்தும் விடமுடியாது.

ள்ளிக்கு ஹிஜாப் அணிந்து செல்வது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் முடிவெடுத்து அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் உறுதிசெய்யப்படட்டும். எனவே ஹிஜாப் பிரச்சனையை மேலும் சர்ச்சையாக்கி சமூக அமைதியை சீர்குலைக்காமல் அமைதி காப்பது அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கடமையாகும். கூடவே நாமும் சமூக வலைதலங்களில் அடுத்தவர்கள் மனதை புண்படும் வகையில் ஹிஜாப் Hijab குறித்த அவதூறு கருத்தக்களை பகிர்வதை தவிர்ப்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை அதுவே நமது பெருமை!!! 

8 பிப்., 2022

நகர்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் திருநங்கைகள்


நகர்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் திருநங்கைகள்

Transgender Persons given tickets in Tamil Nadu Urban local body elections 2022

அரசியலில் சாதி, மத, பாலின வேறுபாடுகளைப் பற்றி பேசியும், விவாதித்தும் வரும் நமது சமூகம் காலம் காலமாக திருநங்கை மற்றும் திருநம்பிகளை மூன்றாம் பாலினத்தவர்கள் என்று ஒதுக்கியே வருகிறது. ஏன் இன்றளவும் அத்தகைய நிலையே தொடர்கிறது. இச்சூழலில் தீவிர அரசியலில் அதாவது தேர்தல் களத்தில் போட்டியிட ஒரு சில அரசியல் கட்சிகள் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளித்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. வரும் 19 பிப்ரவரி-ல் நடக்க இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு திருநங்கைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது இவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த கட்சிகள்
திருநங்கைககளின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு அளித்த நிலையில் அதனை தொடர்ந்து அக்கட்சி தற்போது நடக்க இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்துள்ளது. வேலூர் நகராட்சியில் வார்டு எண்.40-ல் திருநங்கை ரஞ்சிதா (52) மற்றும் வார்டு எண்.41-ல் திருநங்கை சபீனா (33) ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

அதேபோன்று திமுக, அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் இத்தேர்தலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளன. வேலூர் மாநகராட்சி வார்டு எண் 37-ல் திருநங்கை கங்கா நாயக் (49) என்பவருக்கு திமுக வாய்ப்பளித்துள்ளது. அதேபோன்று அதிமுக சார்பாக சென்னை மாநகராட்சி வார்டு எண்.112-ல் (தேனாம்பேட்டை மண்டலத்தில்) திருநங்கை ஜெயதேவி அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. பாஜக சார்பில் சென்னை மாநகராட்சி வார்டு எண்.76-ல் (திரு.வி.க நகர்) திருநங்கை ராஜம்மா அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்துள்ளது என்பது ஒரு பக்கம் நல்ல செய்தியாக இருந்தாலும், திருநம்பிகளுக்கு வாய்ப்பளிக்காதது ஏமாற்றமளிக்கிறது.

திருநங்கை & திருநம்பி

ஆண் பெண் அல்லாத ஒருவர் தன்னை பெண்ணாக அடையாளபடுத்தி கொண்டு வாழ்ந்தால் அவர் திருநங்கை ஆவார். அதுவே தன்னை ஆணாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் அவர் திருநம்பி ஆவார்.

திருநங்கை, திருநம்பிகளுக்கு ஏன் தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும்?
 
ஆண் பெண் தவிர மூன்றாவதாக ஓர் பாலினமும் உள்ளது. அந்த மூன்றாவது பாலினத்தை சேர்ந்தவர்களில் அவரவர் விருப்பம் போல் திருநங்கை மற்றும்
திருநம்பி என தனது உணர்வுகளுக்கேற்ப தன்னை அடையாளபடுத்திக் கொண்டு வாழ்ந்து வர அவர்களுக்கு உரிமை உண்டு என்ற அடிப்படை விவரம் நமது நாட்டு மக்களுக்கு புரிய வைப்பதற்கான காரணத்திற்காவது திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும்.

காலம் காலமாக நமது சமூகம் திருநங்கை மற்றும் திருநம்பிகளை சக மனிதர்களாக கருதாமல் அவர்களை கேலி செய்தும், இழிவுபடுத்தியும் வந்த நிலையில் தற்போது நமது சமூகம் அவர்களை அங்கீகரிக்க தொடங்கியுள்ளது. அப்படியிருந்தும் இன்றளவும் பெரும்பாலன மக்களிடம் பாலினம் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் திருநங்கை, திருநம்பிகளை இழிவாக பார்க்கும் பழக்கம் முழுவதும் போகவில்லை. 

எனவே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அரசியலில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இனி வரும் தேர்தல்களிலாவது அவர்களுக்கு போதிய வாய்ப்பளித்து ஆண் பெண் பாலினம் போல இன்னொரு பாலினம் உள்ளது. அவர்களுக்கும் சம உரிமை உள்ளது. அவர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். அவர்களாலும் சாதிக்க முடியும் என்று நம் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி திருநங்கை மற்றும் திருநம்பிகளின் கண்ணியத்தை காப்பாற்றுவது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும்.

அரசியல் என்பது இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும் . அதாவது அனைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ ஏற்ற சுற்றுச்சூ...